அரச படைகளிற்கு ஒரு அங்குல நிலத்தையும் வழங்கமாட்டோமென மாவை சேனாதிராசா முதல் புளொட் கஜதீபன் வரை வீர உரையாற்றிவருகின்ற நிலையில் மண்டைதீவில் கடற்படை முகாம் அமைப்பதற்காக காணி சுவீகரிப்பதுக்காக காணி அளவீடு செய்யும் பணிகள் நாளை வியாழக்கிழமை மேற்கொள்ளப்படும் என நில அளவை திணைக்களம் அறிவித்துள்ளது.
யாழ்.வேலணை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள கடற்படை முகாமுக்கு நிரந்தரமாக காணியினை சுவீகரிக்கும் நோக்குடன் காணி அளவீடு மேற்கொள்ளப்படவுள்ளது.
அதேவேளை கடந்த திங்கட்கிழமை யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், இந்த காணிகள் சுவீகரிப்பு தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டது. அதன் போது ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, எமக்கு தெரியாமல் ஒரு காணியையும் கையகப்படுத்த முடியாது.
ஒரு துண்டு காணியை கூட பாதுகாப்பு தரப்பினருக்கு விட்டுக்கொடுக்க முடியாது. அது தொடர்பில் உரிய தரப்பினருடன் பேசுகிறேன் என தெரிவித்திருந்தார்.
ஏற்கனவே பாரிய மனித புதைகுழி மண்டைதீவில் குறித்த கடற்படை தளத்திலேயே இருப்பதாக மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான சி.சிறீதரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.