நாய்களின் காப்பகத்தைக் கூட ஸ்தாபிக்கத் திறனற்றதாக செயற்பட்ட வடக்கு மாகாணசபை - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, April 13, 2019

நாய்களின் காப்பகத்தைக் கூட ஸ்தாபிக்கத் திறனற்றதாக செயற்பட்ட வடக்கு மாகாணசபை

நாய்களின் காப்பகத்தைக் கூட மாகாண சபையால் ஸ்தாபிக்க முடியவில்லை என வடக்கு மகாணசபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார்.

அத்துடன் வடக்கு மாகாண சபையினால் 5 வருடங்களாக செய்ய முடியாதிருந்த காரியத்தினை சிவபூமி அறக்கட்டளை நிலையம் நிறைவேற்றியிருக்கின்றது என அவர் சுட்டிக்காட்டினார்.

இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் அதில் குறிப்பிடுகையில், “வடக்கின் முன்னாள் முதலமைச்சர், உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் என்ற முறையில் கட்டாக்காலி நாய்கள் தொடர்பான பிரச்சினைக்கு உள்ளூராட்சி ஆணையாளர், செயலாளர்களை அழைத்து பல கூட்டங்களை நடத்தியதுதான் 5 வருடங்களாக அவர் சாதித்த சாதனையாக உள்ளது.

சிவபூமி அறக்கட்டளை நிலையத்தினால் இதனை சாதிக்க முடியும் என்றால் ஏன் உள்ளூராட்சி மன்றங்களை நெறிப்படுத்தக் கூடிய நிலையில் அன்றிருந்த முதலமைச்சரினால் சகல உள்ளூராட்சி சபைகளையும் உள்ளடக்கி அவர்களை நெறிப்படுத்தி மாகாணசபையின் அனுசரணையுடன் இவ்வாறான ஒரு திட்டத்தை நிறைவேற்றியிருக்க முடியாது போனது?

இது முழுக்க முழுக்க மாகாண சபையினதும் உள்ளூராட்சி சபைகளினதும் அதிகார வரம்பிற்கு உட்பட்ட ஒரு விடயம். இவ்வாறான சிறு வேலைத் திட்டங்களை கூட செய்யத் திறனற்றவர்களாக மாகாணசபையில் இருந்துவிட்டு எமது பிரதேசத்திற்குக் கூடிய அதிகாரங்கள் வேண்டும் என்றும் சமஷ்டி அதிகாரங்கள் வேண்டும் என்றும் பேசிக்கொண்டிருப்பதில் பலனேதும் இல்லை.

கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர்கள் வானம் ஏறி வைகுண்டம் போக கனவு காண்கின்றனர்.

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பதை கலாநிதி ஆறு திருமுருகன் நிரூபித்துக்கொண்டிருக்கிறார். தனி மனிதனாக நின்று பல மக்கள் நலன்சார் செயற்றிட்டங்களை வெற்றிகரமாக நடத்திவரும் கலாநிதி ஆறு திருமுருகனின் நாய்கள் காப்பகம் திட்டமும் வெற்றி பெறவேண்டும் என வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சியில் நாய்கள் காப்பகம் திறந்து வைப்பு!

கிளிநொச்சி பளை பிரதேச செயலக பிரிவில் இயக்கச்சி பகுதியில் சிவபூமி அமைப்பினரால் நாய்கள் காப்பகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் நான்கு மணியளவில் சிவபூமி நாய்கள் சரணாலயம் வீடற்ற நாய்களின் காப்பகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.



அநாதரவாக தெருக்கள் மற்றும் ஏனைய இடங்களில் காணப்படுகின்ற நாய்கள் குறித்த காப்பகத்தில் பராமரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சிவபூமி அமைப்பின் தலைவர் ஆறு திருமுருகன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் நல்லூர் ஆதீன குரு முதல்வர், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், பளை பிரதேச செயலாளர் ஜெயராணி, பிரதேச சபை தவிசாளர் சுரேன், வடக்கு மாகாண ஆளுநரின் மக்கள் தொடர்பு அதிகாரி ஆகியோர் கலந்துகொண்டு திறந்து வைத்துள்ளனர்.