மகளுக்கு பணம் கொடுத்த பெண்ணை வாளால் வெட்டிய தாய்! - Kathiravan - கதிரவன்

Breaking

Sunday, April 7, 2019

மகளுக்கு பணம் கொடுத்த பெண்ணை வாளால் வெட்டிய தாய்!

தனது மகளுக்கு பகுதி நேர வகுப்புக்கு செல்ல 200 ரூபாய் பணத்தை வழங்கியதால், ஆத்திரமடைந்த அனுராதபுரம் நகரில் நடைபாதையில் வியாபாரம் செய்து வரும் பெண்ணை வாளால் வெட்டிய மற்றுமொரு நடைபாதையில் வியாபாரம் செய்யும் பெண்ணை அனுராதபுரம் பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

அனுராதபுரம் விமான நிலைய பிரதான வீதியில் வைத்தியசாலை நடைபாதையில் மென் பானம் மற்றும் துணி விற்பனையில் ஈடுபட்டு வரும் இரண்டு பெண்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால், ஏற்பட்ட மோதலில் மென் பானம் விற்பனை செய்யும் பெண் மற்றைய பெண்ணை வாளால் தாக்கியுள்ளார். தாக்குதலுக்கு பயன்படுத்திய வாளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

தாக்குதல் நடத்திய பெண்ணின் மகள், ரம்பவ பிரதேசத்தில் இருந்து அனுராதபுரம் நகருக்கு பகுதி நேர வகுப்புக்கு செல்ல தாயிடம் பணம் கேட்டுள்ளார். அப்போது அந்த பெண் மகளை திட்டியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாய் பணம் கொடுக்காததால், மகள் அழுதுக்கொண்டு திரும்பிச் செல்லும் போது துணி விற்பனை செய்யும் பெண், அம்மா பணம் கொடுக்கவில்லையா என்று கேட்டுள்ளார்.

தாய் பணம் கொடுக்கவில்லை எனவும் பேருந்தில் செல்லவும் பணமில்லை எனவும் மற்றைய பெண்ணின் மகள் கூறியுள்ளார்.

அந்த பிள்ளை மீது அனுதாபம் ஏற்பட்டதால், துணி விற்பனை செய்யும் பெண் தன்னிடம் இருந்த 200 ரூபாயை கொடுத்து வீட்டுக்கு போகுமாறு கூறியுள்ளார்.

அப்போது மென் பானம் விற்பனை செய்யும் பெண், பணத்தை கொடுத்த பெண்ணை கடுமையாக திட்டியுள்ளதுடன் போத்தல் ஒன்றை போட்டு உடைத்துள்ளார்.

இதன் பின்னர் துணி விற்பனை செய்யும் பெண்ணிடம் சென்று அவருடன் சண்டையிட்டுள்ளதுடன் கையில் இருந்த வாளால் தலையில் வெட்டியுள்ளார். சம்பவத்தில் காயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.