பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, April 10, 2019

பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை!

பல்கலைக்கழகங்களின் நற்பெயர்களை சீரழிக்கும் பாழ்பட்ட செயல்களில் ஒன்றாக சமகாலத்தில் பகடிவதை எனும் பெயரில் முன்னெடுக்கப்படும் அரக்கச் செயல்களை அடையாளப்படுத்த முடிகின்றது. இவர்களின் மூர்க்கத்தனமான செயல் வடிவங்களை பார்க்கும் போது இது பல்கலைக்கழகமா இல்லை கடையர்களின் கழகமா எனும் சந்தேகங்களே வலுக்கிறது.

பன்னிரண்டு பதிமூன்று வருட கால பாடசாலை கல்வியை கற்று அங்கிருந்து நாடளவில் தெரிவு செய்யப்படும் 4-5% மான மாணவர்களுள் ஒருவராக, கற்பனை மிகுந்த கனவு உலகத்தில் சஞ்சரிக்கின்றான் அப்பாவி மாணவன் ஒருவன். பாவம் பஸ் ஏறி பலிபீடம் போகிறோம் என்பதை கிச்சிந்தும் மறந்தவனாக, ஆனாலும் ஓரிரு வாரங்களில் பின்னால் செய்தி வருகின்றது சிரேஷ்ட மாணவன் ஒருவனின் பகடிவதையின் போது தலையின் பின்புறத்தில் பலமாக அடிபட்டு மயக்க நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக.

இங்கு நான் கட்டுரைக்காக உவமானங்கள் எடுத்து எனது நோக்கத்தை ஒப்புவிக்கவில்லை. மாறாக மேற்கூறிய விடயம் அன்மையில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் இடம்பெற்ற சோக சம்பவமாகும். பெரும் எதிர்பார்ப்போடும், தனது எதிர்காலத்தை நெறிப்படுத்தி தன்னை வளர்த்து கொள்ளும் பேரவாவோடும் பல்கலைக்கழகம் சென்ற மாணவன் இன்று தலையின் பின்புறத்தில் பலமாக அடிபட்டதன் விளைவாக மூளையில் ஏற்பட்ட இரத்த கசிவினால் நாளுக்கு நாள் அவனின் நிலை கவலைக்கிடமாகி வரும் நிலையில் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இந்த விடயத்தில் குறித்த பல்கலைக்கழக நிருவாகம் தொடர்ந்தும் அசிரத்தை போக்குடன் நடந்து வருவதும் கவலையளிக்கின்றது.


இவ்வாறான சம்பவம் ஒன்று நடந்து முடிந்துள்ளதுடன் இதற்கான தீர்வு தான் என்ன, அது சட்ட முறைகளின் கீழால் எவ்வாறு வரையறுக்கப்பட்டுள்ளது என ஆராயும் போது கடந்த 1990 ஆண்டுகளுக்கு பிற்பாடு இதுபோன்ற பல குரூரமான பகடிவதைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்ற போதிலும் அவற்றுக்காக எங்குமே நியாயமான தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக அறியமுடியவில்லை. அத்துடன் இவ்வாறான விஷமத்தனமான நிகழ்வுகளுக்கான சட்டங்கள் எவ்வாறு வரையறை செய்யப்பட்டுள்ளது என்றால் அதுவும் ஒரு நிலையில்லாத இறுக்கமில்லாத ஒன்றாகவே காணப்படுகின்றது.

இவ்வாறான இறுக்கமில்லாத இலகுத்தன்மை கொண்ட சட்ட ரீதியிலான நெறிப்படுத்தல்களின் விளைவாக பல்கலைக்கழகங்கள் தோறும் இவ்வாறான வாழ்வழிக்கும் அரக்கர்கள் அதிகரிக்கின்றார்களே தவிர குறைந்த பாடில்லை. அத்துடன் இவை தொடர்பான விமர்சனங்கள் காலத்துக்கு காலம் பலராலும் தழலில் வீழ்ந்த சாம்பிராணி போலும் புகைக்ககிய போதும் சில தினங்களில் சட்டென அடங்கி விடுகின்றது.மேற்படி பகடிவதை எனும் பெயரில் பல்கலைக்கழகங்களில் அரங்கேற்றப்படும், மாணவர்களை உடலியல், உளவியல் மற்றும் பாலியல் ரீதியாலான சித்திரவதை பாங்கில் மானபங்க படுத்தும் இழிசெயல் கடந்த காலங்களில் தென்னிலங்கையில் உள்ள பல பல்கலைக்கழகங்களில் இடம்பெற்று வந்தாலும் சமகாலத்தில் வடக்கிலும், கிழக்கிலும் உள்ள பல பிராந்திய பல்கலைக்கழகங்களையும் இது ஆட்கொண்டுள்ளது.

இக்கருத்தை வலுப்படுத்த கடந்த ஓரிரு மாதங்களில் இடம்பெற்ற சில கசப்பான நிகழ்வுகளை குறிப்பிட முடியும். அதாவது சில மாதங்களுக்கு முன்னால் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் இடம்பெற்ற மோசமான உளவியல் ரீதியான பகடிவதையின் தாக்கத்தின் பின் விளைவால் இடம்பெற்ற உயிரிழப்பு, அத்துடன் நான் மேற்கூறிய கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தில் இடம்பெற்ற தாக்குதலால் பாதிக்கப்பட்ட மாணவனின் பரிதாப நிலை, மட்டக்களப்பு ஆரயம்பதி கல்வியியல் கல்லூரியில் தூக்கிட்டு தற்கொலை செய்த மாணவன், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற குரூரமான மனித வதைகள் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் பெண் மாணவிகள் மீது இடம்பெற்ற முறையற்ற நீரத்தாரை பிரயோகம் என்பவற்றை குறிப்பிட முடியும்.

மேலுள்ள பந்தியில் இறுதியாக குறிப்பிட்ட கிழக்கு பல்கலைக்கழத்தில் இடம்பெற்ற முஸ்லிம் பெண் மாணவிகளை ஓடவிட்டு துரத்தி துரத்தி சேற்றுநீரை வீசிய காணொளிகள் வெளியாகியதுடன், அது சமூக மட்டத்தில் பாரிய அதிருப்தி அதிர்வலைகளையும் ஏற்படுத்தி இருந்ததை நாம் அறிவோம். இது தொடர்பில் விரிவாக நோக்க முடியும். அங்கு இடம்பெற்ற நிகழ்வுகளை நாம் நேரடியாக பார்க்கவில்லை எனினும் கேட்டறியும் சில விடயங்களோ எம்மை ஆழ்துயரத்தில் ஆழ்த்திச் செல்கின்றன.அங்கு இடம்பெற்ற விசமத் தனமான செயலில் முஸ்லிம் மாணவர்கள் சிலரும் பங்குதாரர்களாக இருந்ததாகவும் தகவல்கள் கிட்டுகின்றது. அவர்கள் முஸ்லிம்கள் தானா என்ற வினக்களே என் மனதில் விரவி எழுகின்றது. பல்கலைக்கழக்கழகங்கள் தோறும் முஸ்லிம் மஜ்லிஸ் என்றும் முஸ்லிம் அமைப்புகள் என்றும் இருப்பவர்களின் கண்கள் எல்லாம் என்ன செய்கின்றன எனும் வினாக்களும் அதிகம் எழாமல் இல்லை என்னளவில். நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் உள்ள முஸ்லிம் மாணவர்கள் மட்டுமே போதும் அனைத்து மாணவர்களையும் திருத்துவதற்கு காரணம் அவ்வளவு அழகாக பண்பாடுகளை பற்றி எடுத்தியருக்கின்றது நாம் பின்பற்றும் மார்க்கம். அடுத்தவனை துன்புறுத்தல், பலவீனப்படுத்தல், நோவினை செய்தல், மானபங்க படுத்தல் மற்றும் நலிவடையச் செய்தல் என அத்தனையும் தவறு என தெளிவாக மேற்கொளிட்டு கூறிய மார்க்கம் என்றால் அது இஸ்லாம் மாத்திரமே அது அப்படி இருக்க அந்த மார்க்கத்தின் வழி தொடர்ந்த நீங்களும் இணைந்து இந்து பஞ்சமா பாதகங்களை விளைவிப்பதன் அரத்தங்கள் தான் என்னவோ….

முஸ்லிம் அமைப்புக்களுக்கு இங்கு பாரிய பொறுப்பு இருக்கின்றது. முதலில் முஸ்லிம் மாணவர்கள் பகடிவதை எனும் பெயரில் செய்யும் கொடூரங்களை முடிவுறுத்த வேண்டும். அத்துடன் முஸ்லிம் பெண்களையும், மாணவர்களையும் பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் கொடூர பகடிவதைகளில் இருந்தும் பாதுகாக்க நடவடிக்கைகள் மேற்கோள்ள வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும்.

முஸ்லிம் அமைப்புக்களுக்கு இங்கு பாரிய பொறுப்பு இருக்கின்றது. முதலில் முஸ்லிம் மாணவர்கள் பகடிவதை எனும் பெயரில் செய்யும் கொடூரங்களை முடிவுறுத்த வேண்டும். அத்துடன் முஸ்லிம் பெண்களையும், மாணவர்களையும் பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் கொடூர பகடிவதைகளில் இருந்தும் பாதுகாக்க நடவடிக்கைகள் மேற்கோள்ள வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும்.


மேலும் இந்த பகடிவதை எனும் பதம் முதலில் பிரித்தானிய பல்ககைக்கழகங்களிலே தோற்றம் பெற்றன எனினும் இன்று எமது நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் இடம்பெறுவது போன்ற மனித வதைகளோ அல்லது சித்திரவதைகளோ அங்கு இடம்பெறுவதில்லை. மாறாக பகடிவதை என்பது அவர்களை பொறுத்தவரையில் தெளிவான பதவிளக்கத்துடனே பின்பற்றப்பட்டு வருகின்றது. அதாவது கனிஷ்ட மாணவர்களிடம் இருக்கும் கூச்ச சுபாவம் மற்றும் அவர்களின் சமூகமயமில்லாத பண்புகள் என்பவற்றை பல்கலைக்கழக சூழலில் ஒழித்து அவர்களை சிறந்த பன்படுத்தப்பட்ட மனித வளங்களாக மாற்றும் ஓர் அடிப்படை செயலாகவும் அத்துடன் கனிஷ்ட மாணவர்களிடம் சிரிப்பூட்டும் வகையில் பேசி அவர்களை மகிழ்விக்கும் நிகழ்வாகவே அவர்கள் அதனை மேற்கொள்கின்றார்கள்.

ஆனாலும் CURE எனும் அரச சார்பற்ற நிறுவனத்தின் நிறுவுனர்களில் ஒருவரான அகர்வால் பகடிவதையால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக இலங்கையை அடையாளப்படுத்துகின்றார். அத்துடன் எமது நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள முறையற்ற பகடிவதை தொடர்பான முறைப்பாடுகளும் புள்ளிவிபரங்களும் மலைபோலும் குவிந்து கிடப்பதையும் அவதானிக்க முடிகிறது. அதாவது கடந்த 2017 ஆண்டில் மட்டும் பகடிவதை தொடர்பாக 250-300 வரையான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளது. கடந்த 2018 ஆண்டில் மட்டும் பகடிவதை காரணமாக 14 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளதாகவும் அறியப்படுகின்றது. மேலும் அதே ஆண்டில் ஏறத்தாழ 2000 மாணவர்கள் வரையில் தமது பல்கலைக்கழங்க பட்டப்படிப்பைவிட்டும் இடைவிலகியுள்ளார்கள். இங்கு எமது நாட்டின் கல்வி முறைமையில் உள்ள மற்றுமொரு குறைபாட்டையும் குறிப்பிட முடியும் அதாவது பண்பற்ற மாணவர்களின் பல்கலைக்கழக நுழைவின் விளைவே இவ்வாறான கசப்பான புள்ளிவிபரங்களை பதிவிடுகின்றது என்பது புலப்பாடாகும்.

இந்த நிலை தொடரும் வருடங்களில் அதிகரிக்கும் அபாயத்தை எதிர்நோக்குகின்றதே தவிர குறைவடையும் சாத்தியம் துளியளவும் இல்லை என்பதே பெரிதும் கவலைக்கிடமாக உள்ளது. எவ்வாறு இந்த பல்கலைக்கழக பகடிவதை பரிதாப அவலங்களை களைந்தெறிய முடியும்? எனும் வினாவுக்கு இலகுவான விடைகள் எம் முன்னே இருந்தாலும் அதிகாரங்களை கையகப்படுத்தி வைத்திருக்கும் சட்டமும், அதிகாரிகளும் அவற்றை கையாளும் விதம் அசமந்தமாகவே காணப்படுகின்றது.

ஒரு நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டத்தின் இறுக்கமானது அந் நாட்டின் குடிமக்களின் பண்பாட்டு விழுமியங்களின் மேம்பாட்டில் பெரிதும் செல்வாக்கு செலுத்தும். என்பது யாவரும் பொய்பிக்க முடியாத ஓர் உண்மையாகும். அந்த வகையில் சட்டத்தை மேலும் இறுக்கமாக்குவதன் ஊடாக இந்த பல்கலைக்கழக பகடிவதையை முற்றாக ஒழிக்க முடியும் என்பது யதார்த்தமாகும். இவற்றையும் தாண்டி மாணவர்களின் சிந்தனைகள் பரிமாண மாற்றம் காணும் போதே இந்த பகடி வதை எனும் பெயரிலான சித்திரவதைகளின் குறைவடைதல் என்பது சாத்தியப்படும்.

மேலும் இந்த பகடிவதை தொடர்பாக எந்தளவு சட்டங்கள் செயற்படுகின்றது என்பது ஒருபுறம் இருக்க சட்டங்கள் எவ்வாறு வரையறை செய்யப்பட்டுள்ளது என்பன பற்றியும் மாணவர்கள் தெளிவடைய வேண்டிய தேவையுள்ளது. குறிப்பாக 1998 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க கல்வி நிறுவனங்களில் வன்முறைகளை தடைசெய்யும் சட்டத்தின் படி பகடிவதை ஒரு சட்டத்தை வழிகோலிய குற்றமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பகடிவதை மட்டுப்படுத்தப்பட முடியுமாக இருக்கின்ற போதிலும் அதிகரிப்பதன் காரணம் தான் என்ன……?

இங்கு மாணவர்கள் குறித்த சட்டத்தின் ஊடாக தீர்வுகளை பெற முயல்வதை காட்டிலும் தற்கொலை, இடைவிலகல் மற்றும் இன்னோரன்ன புறம்பான வழிகளை நாடுவது அறிவுடமையாகாது. மேலும் மாணவர்கள் பகடிவதைக்குள்ளாக்கப்படுவதை உயர் மட்டங்களுக்கு அறிவிக்க பல வழிகள் நாட்டில் நடைமுறையில் உள்ளமையும் யாவரும் அறிந்திராத ஒன்றாகும் அந்த வரிசையில்..

1. பகிடிவதைகள் தொடர்பில் அறிவிக்க 24 மணிநேர சேவையாக 011-2123700 எனும் தொலைபேசி இலக்கம் நடைமுறையில் உள்ளது இந்த இலக்கத்தின் ஊடாக உங்களின் பகடிவதை தொடர்பான முறைப்பாடுகள் ஏற்கப்படுகின்றன.

2. சமகால அன்ரோயிட் உலகிற்கு ஏற்றாற்போல் Anti Ragging App எனும் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

3. இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இணையப்பக்கத்தில் பகடிவதை தொடர்பாக முறைப்பாடுக்கு ஒரு தனி பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான முறைப்பாட்டு வழிகளை மாணவர்கள் அதிகம் பயன்படுத்தாமைக்கான காரணங்களும் இல்லாமல் இல்லை ஆனாலும் அதனை இவ்விடத்தில் விவரிப்பதை விடுத்து நிச்சயமாக மாணவர்கள் மேற்குறித்த வழிகளை பயன்படுத்தி முறைப்பாடுகளை அதிகம் பதிவிட வேண்டும் என்பது எனது கருத்தாகும்.

காரணம் நீங்கள் விடுகின்ற தவறுகள் நாளை அதேஇடத்தில் மற்றுமொரு மாணவனுக்கு நடாத்தப்படவிருக்கும் தற்கொலை தூண்டல், உளவியல் தாக்கம், உடலியல் சித்திரவதை மற்றும் இடைவிலகல் என பல பாதகமான முடிவுகளுக்கு ஏதுவாக அமைந்து விடும் என்பதையும் மறந்துவிடக்கூடாது.