இலங்கையில் மீண்டும் சுழற்சி முறையில் மின்சார விநியோகத்தை தடை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் தொடரும் கடும் வரட்சி காரணமாக மின்சார உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மின்வலு எரிசக்தி அமைச்சு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.இதன் காரணமாக சீராக மின்சார விநியோகத்தை முன்னெடுப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
பல பகுதிகளிலும் மழை பெய்தாலும் மின் உற்பத்தி நிலையங்கள் அமைந்திருக்கும் நீரேந்து பிரதேசங்களில் மழை பெய்யவில்லை.நீரேந்து பிரதேசங்களின் நீர் மட்டம் தற்சமயம் 30 சதவீதமாக காணப்படுகிறது.பண்டிகைக் காலத்தில் மின்சார தேவை அதிகரித்திருந்தாலும் நீர் மின்நிலையங்களிலிருந்து போதியளவிலான மின்சாரம் வழங்கப்படுகிறது.
கடந்த புதன்கிழமை முதல் மின்சார துண்டிப்பு இடைநிறுத்தப்பட்டது. எனினும், மின்சாரத்தை உற்பத்தி செய்வது தொடர்ந்தும் சவாலாகவே காணப்படுறது.இந்நிலையில் எதிர்வரும் நாட்களில் மீண்டும் சுழற்சி முறையில் மின்சார விநியோகத்தை தடை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அமைச்சின் ஊடகப் பேச்சாளர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.கடந்த இரு வாரங்களுக்காக 5 மணித்தியாலங்களுக்கு சுழற்சி முறையில் மின்விநியோகம் தடை செய்யப்பட்டது. இதன் காரணமாக நாடாளவிய ரீதியாக பல்வேறு தரப்பினரும் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.