தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்கூட்டியே அறிந்திருந்தும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்காதது தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் தொடர்பில் கடும் ஆத்திரம் வெளியிட்டு வருகின்றனர்.
மேலும் பல தாக்குதல் இடம்பெறலாம் என்ற அச்சுறுத்தல் காணப்படுகின்ற நிலையில் ஸ்ரீலங்கா அரசாங்கம் பொதுமக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை தங்களுக்கு முழுமையாக அற்றுப்போய்விட்ட மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதலில் பேரிழவை சந்தித்த இடங்களில் ஒன்றான கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தை சூழவுள்ள பகுதிகளுக்கு எமது செய்தியாளர் சரியான் சுஜித், இன்றைய தினம் நேரில் சென்று மக்களை சந்தித்த போது அதிர்ச்சியில் இருந்து இன்னமும் மீள முடியாதுள்ள மக்கள் தமது அதிருப்திகளையும், ஆத்திரத்தையும் பதிவுசெய்துள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களை அடுத்து ஏற்பட்ட பதற்றநிலையும் மரண பயமும் நாட்டு மக்களை தினமும் வாட்டி வதைக்கின்றது.
ஒருபுறம் தற்கொலைத் தாக்குதல்கள் ஏற்படுத்திய விளைவுகளையும் வலிகளையும் சுமந்த வண்ணம் மக்கள் கவலையுடன் காணப்படுகின்றனர்.
மறுபுறத்தில் போர்க் காலத்தைப்போன்று அனைத்து இடங்களிலும் முப்படையினருடன் இணைந்து பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் தீவிர சோதனை நடவடிக்கைகளில் நாடளாவிய ரீதியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு கடந்த ஞாயிறு ஆராதனையில் கலந்துகொள்ளச் சென்று குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் காணாமற் போயுள்ள சரோஜினி என்பவருடைய சகோதரரான வீ.இராஜரட்ணம், அரசாங்கத்திலுள்ள அனைவரும் தங்களது உயிரைப் பாதுகாத்துக்கொண்டு மக்களின் உயிர்களை பலிகொடுத்துவிட்டதாக தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா அரசாங்கம் பாதுகாப்பு தொடர்பில் எந்த அறிவிப்புக்களை வெளியிட்டாலும் ஒவ்வொரு இரவுகளும் மிகுந்த அச்சத்துடனேயே வாழ்ந்து வருவதாக தெரிவிக்கின்ற கொழும்பு ஜெம்பட்டா ஒழுங்கைச் சேர்ந்த மக்கள், உயிருடன் இருக்கின்ற மக்களையாவது அரசாங்கம் காப்பாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.
இதேவேளை தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்று இன்றுடன் 04 நாட்கள் கடந்துள்ள நிலையில் அச்சத்தில் உறைந்த கொழும்பு நகரம் இன்னும் முழுமையாக வழமைக்குத் திரும்பவில்லை.
திடீர் சோதனை நடவடிக்கைகளில் தேசிய புலனாய்வுப் பிரிவு, இரகசிய பொலிஸார் ஆகியோரும் விசேட அதிரடிப் படையினருடன் இணைந்து பொலிஸார் மற்றும் முப்படையினரும் கொழும்பு நகரம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக நாடு முழுவதிலுமுள்ள மக்கள் தொடர்ந்தும் அச்சத்துடனேயே நாட்களைக் கழித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.