இலங்கையின் அந்தமான மாத்தறை- டொந்தர பகுதியிலிருந்து நெட்டாங்காக சுமாா் 400 கிலோ மீற்றா் வான் பரப்பை அசாத்தியமாக கடந்து யாழ்ப்பாணத்தை சோ்ந்த பந்தைய புறாக்கள் சாதனை பாிந்துள்ளன.
ட்ராகன் மவுத், டொந்தர என்ற இடத்திலிருந்து விடுவிக்கப்பட்ட பந்தயப் புறாக்கள் பிற்பகலில் யாழ்ப்பாணத்தை அடைந்து இந்தச் சாதனையைப் புரிந்தன என்று பபுகயா அறிவித்துள்ளது.
பந்தயப் புறாக்கள் கழகம் – யாழ்ப்பாணம் (பபுகயா) 2 வருடங்களாக புறாப் பந்தயங்களை ஒழுங்கு செய்து நடத்தி வருகிறது. இலங்கையின் மிகக் கூடிய தூரப் போட்டியான “ட்ராகன் மவுத்” நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.
யாழ்ப்பாணத்தின் பிரபல மகப்பேற்று மருத்துவரும் புறா ஆர்வலருமான மருத்துவ நிபுணர் கே.சுரேஸ்குமாரின் அனுசரணையோடு இந்தப் போட்டி மிகப் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது என்கின்றனர் பபுகயா நிர்வாகிகள்.
யாழ்ப்பாணத்தில் இருந்து தரைப் பாதை வழியாக சுமார் 600 கிலோ மீற்றர்கள் தூரத்தில் இருக்கிறது ட்ராகன் மவுத். அதுவே இலங்கையின் அந்தம். யாழ்ப்பாணத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட சுமார் 100 வரையான புறாக்கள் அந்த இடத்திலிருந்து விடுவிக்கப்பட்டன.
எட்டரை மணி நேரத்தில் பறந்து முதல் புறா யாழ்ப்பாணத்தை அடைந்து சாதனை படைத்தது. சிறிய நேர இடைவெளிகளில் ஏனைய புறாக்களும் ஒவ்வொன்றாக வந்து சேர்ந்தன. வெற்றிபெற்ற புறாவுக்கு ஒரு லட்சம் ரூபா பணப் பரிசும் பதக்கம், வெற்றிக் கோப்பை என்பனவும் வழங்கப்படுகின்றன.
இரண்டாம் இடத்திற்கு 75 ஆயிரம் ரூபாவும் மூன்றாம் இடத்திற்கு 50 ஆயிரம் ரூபாவும் ஏனைய 7 புறாக்களுக்கும் தலா 10 ஆயிரம் ரூபாவும் பரிசுகளாக வழங்கப்படுகின்றன.
இலங்கையில் இதுவரையில் ஆகக் கூடுதலாக 300 கிலோமீற்றர்கள் வரையான பந்தயங்களே இடம்பெற்றுள்ளன. இப்போதுதான் முதற்றடவையாக 400 கிலோ மீற்றர்கள் போட்டி நடத்தப்பட்டிருக்கிறது என்கிறது பபுகயா.