ஈழத் தமிழர்கள் விருந்தோம்பல் பண்பில் சிறந்தவர்கள் என்றும் கலைஞர்களை கௌரவிப்பதிலும் அவர்களே முதன்மையானவர்கள் என்றும் பிரபல பின்னணிப் பாடகி டொக்டர் அனுராதா ஸ்ரீராம் லண்டனில் தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை லண்டன், எல்ஸ்றீ “Holiday Inn” நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற சுபராவின் “சுபமான ராகங்கள்” இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போதே பாடகி டொக்டர் அனுராதா ஸ்ரீராம் இவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தனது வாழ்வில் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இலங்கைக்கானதாக அமைந்திருந்ததாகவும் இலங்கை தனது இரண்டாவது தாய் வீடு போன்றது என்றும், ஈழத் தமிழர்களின் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போதெல்லாம் மிகுந்த பாதுகாப்பதுடன் தனது இல்லத்தில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சுபராவின் நிறுவுனர்களில் ஒருவரான மகாலிங்கம் சுதாகரன் மற்றும் அவரது குடும்பத்தினரின் அழைப்பை ஏற்று இம்முறை லண்டனுக்கு வருகை தந்ததாகவும் அவர்கள் தன்னை நன்றாக வரவேற்று உபசரித்தனர் என்றும் தெரிவித்துள்ளார்.
சுபராவின் “சுபமான ராகங்கள்” இசை நிகழ்ச்சியில் துஷி – தனு சகோதரிகளின் இசையில் பாடகி அனுராதா ஸ்ரீராம் அவர்கள் பல இனிமையான பாடல்களைப் பாடி ரசிகர்களை மகிழ்வித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் பிரபல கர்நாடக இசைப்பாடகர் யாதவன், மற்றும் ஹரி, நவீனா, சிந்து, பிரவீணன், மஞ்சு, மருத்துவர் திசாந்தன், மருத்துவர் சந்தோஷ் ஆகியோரும் பாடல்களைப் பாடி சிறப்பித்திருந்தனர்.
யா/கம்பர்மலை வித்தியாலயம் கொம்மந்தறை பழைய மாணவர் சங்கத்துக்கு பாடசாலையின் பழைய மாணவரும் சுபராவின் நிறுவுனர்களில் ஒருவரான மகாலிங்கம் சுதாகரன் மற்றும் சுபரா நிறுவனத்தின் தலைமை செயற்பாட்டு அதிகாரியுமான திபாகரன் தெட்சணாமுர்த்தி ஆகியோரால் 1001 ஸ்ரேலிங் பவுண்ஸ் நிதிக்குரிய காசோலை நிகழ்வில் கையளிக்கப்பட்டது.
மேலும் இந்த ஆண்டு சுபராவின் மற்றுமொரு நிகழ்ச்சியான கர்நாடக இசைக்கச்சேரியை பாடகி அனுராதா ஸ்ரீராம் அவரது கணவர் ஸ்ரீராம் பரசுராம் ஆகியோர் இணைந்து வழங்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.