தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்தான அடையாளங்கள், சின்னங்கள், குறியீடுகள் என எதுவானாலும் மாற்றுதலுக்கோ, உருவச் சிதைப்பிற்கோ உட்படுத்துதல் தேசத்துரோக குற்றமாகும். இவை ஒன்றும் கட்சிகளின் கொடிகளோ சாதி, மத அடையாளங்களோ அல்ல. ஆயிரமாயிரம் மாவீரர்களின் குருதியால் புனிதப்படுத்தப்பட்ட தமிழினத்தின் சொத்தாகும்.
ஆயுத மௌனிப்புக்கு பின்னரான காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அடையாளங்கள் குறியீடுகள் சிதைவிற்குள்ளாக்கும் அநாகரிகச் செயற்பாடுகள் தொடர்ந்தவண்ணமுள்ளது. எம்மிடையே கொள்கை வழியே உண்மையாகவும் உறுதியாகவும் செயல்படும் தலைமை இல்லாமையே இந்த அயோக்கியத்தனங்கள் நடைபெறுவதற்கு மூலகாரணமாகும்.
புலம்பெயர் தேசத்தில் ஓரளவு சுதந்திரமாக செயல்படக்கூடிய நிலையிருந்தும் நான் பெரிது நீ பெரிது என்ற தன்முனைப்பு நிலையாலும் சுயநலன்சார் பிளவு நிலையாலும் வலுவான தலைமையொன்றை கட்டியெழுப்ப முடியாதுள்ளமை பெரும் துர்ப்பாக்கியமாகும்.
குறைந்தபட்சம் தமிழின அழிப்பு நாள் மற்றும் மாவீரர் நாள் போன்ற நினைவெழுச்சி நாட்களை நினவுகூறும் நிகழ்வுகளைக் கூட ஒருமித்த கருத்து நிலைப்பாட்டில் ஒன்றிணைந்து ஏற்படு செய்ய முடியாமல் காலம் செல்லச் செல்ல பிளவுகளும் பிரிவுகளும் அதிகரித்துச் செல்வது இதற்காகவா இத்தனை விலை கொடுத்தோம் என்ற விரக்திநிலைக்கே இட்டுச்செல்கின்றது.
ஈடு இணையற்ற பெரும் உயிர்விலை கொடுத்து உலகத் தமிழினத்திற்கு தலைநிமிர்வை ஏற்படுத்திய தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும், அடையாளங்களையும், சின்னங்களையும், குறியீடுகளையும் இவ்வளவு குறுகிய காலத்திற்குள்ளாகவே காப்பாற்ற வக்கற்றவர்களாக நாம் நிற்பதானது ஆடையிழந்து அம்மணமாக நிற்பதற்கு ஒப்பானதாகும்.
புலம்பெயர் தேசத்தில், தமிழீழத் தேசியக் கொடியான புலிக்கொடியை ஏற்க மறுப்பவர்களும், தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் படத்தை பயன்படுத்த எதிர்ப்பவர்களும் குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும் அதுகுறித்தான கயிறுழுப்புகள் சிறு அளவில் நடைபெற்று வருவதும் இனத்தின் அவமானமாகும்.
இது ஒருபக்கமிருக்க தமிழீழ தேசிய அடையாளங்களை சிதைவுக்குள்ளாக்கும் அயோக்கியத்தனம் தமிழ்நாட்டிலேயே அதிகமாக நடந்தேறிவருகிறது. அறிந்தோ, அறியாமலோ, ஆர்வக்கோளாரினாலோ இவ்வாறான தவறுகள் நடப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
முக்கியமாக தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் படங்களே அதிகமாக சிதைவிற்குள்ளாக்கப்பட்டு வருகிறது. தேசியத் தலைவரின் படத்தை சின்னதாகவோ, பெரிதாகவோ பயன்படுத்தி தத்தமது அபிமானம் பெற்றவர்களின் படங்களையும் சேர்த்து பதாகைகள் வடிவமைப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது. அதைவிடுத்து, தமது அபிமானம் பெற்றவரின் முகத்தை தேசியத் தலைவரின் உடலுடன் இணைத்து மேற்கொள்ளும் உருவச்சிதைப்பு வேலைகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
கடந்த காலங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சுவரொட்டிகள் அல்லது பதாகைகள் இவ்வாறான அயோக்கியத்தனத்தின் வெளிப்பாடாய் காட்சியளித்துவந்த நிலைமாறி இன்று ஒரு திரைப்படத்தில் அவ்வாறான அயோக்கியத்தனம் இடம்பெறச் செய்யப்பட்டுள்ளமையானது உடனடியாக அறுவைச்சிகிச்சை மூலம் சீர் செய்யப்பட வேண்டிய அபாய கட்டத்தை இப்பிரச்சினை எட்டியுள்ளதை உணர்த்தி நிற்கின்றது.
நடிகர் தனுசின் இயக்கத்தில் நடிகர் ராச்கீரன் நடிப்பில் அண்மையில் வெளிவந்த ப.பாண்டி திரைப்படத்தில்தான் இந்தக் கொடுமை அரங்கேறியுள்ளது. இது குறித்து கனடாவில் வசித்துவரும் சகோதரன் கார்த்திக் தெரியப்படுத்தியதையடுத்து திரைப்படத்தை பார்த்தேன்.
திரைப்படத்தின் அறிமுகக் காட்சியில் நடிகர் ராச்கீரன் அவர்களின் திரையுலக பங்கேற்பை வெளிப்படுத்தும் விதமாக அவர் பெற்ற விருதுகள், நினைவுப் பரிசுகள் காட்சிப்படுத்தபடுகிறது. காட்சிகள் நகரும்போது உடலின் அசைவியக்கத்தை ஒரு கணம் நிறுத்தி கோபத்தின் உச்சிக்கே கொண்டுசெல்கிறது அந்த காட்சி.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒப்பற்ற தருணங்களின் சாட்சியாக புகைப்படங்களை வரிசைப்படுத்தும் போது முதன்மையிடங்களுக்குள் தன்னை இணைத்துக்கொள்ளும் அதி முக்கிய வரலாற்று சந்திப்பின் சரித்திர சாட்சியாக விளங்கும் அந்தப் புகைப்படம் எமது நினைவாற்றலில் ஆழமாகப் பதிந்துவிட்டதால் கணப்பொழுது நேரத்தில் கடந்து சென்றபோதிலும் உணரமுடிந்தது.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். அவர்களும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களும் ஒன்றாக சந்தித்த சரித்திர நிகழ்வை வெளிப்படுத்தும் புகைப்படத்தை ப.பாண்டி படக்குழுவினர் முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளார்கள். இது தேசத் துரோகத்திற்கு இணையான குற்றமாகும். இதனை ஒருபோது ஏற்க முடியாது.
குறித்த படத்தில் உள்ள தமிழீழத் தேசியத் தலைவரின் முகத்தை தொழில்நுட்ப உதவியுடன் மாற்றி நடிகர் ராச்கீரனின் முகத்தை இடம்பெறச் செய்துள்ளார்கள். எம்.ஜி.ஆர். அவர்களுடன் ராச்கீரன் சேர்ந்து நிற்பது போன்ற புகைப்படம் வேண்டுமாயின் அதனை வேறு வழிகளில் செய்திருக்கலாமே. அதைவிடுத்து குறித்த படத்தை சிதைத்து பயன்படுத்தியுள்ளமை வேண்டுமென்றே செய்த தவறாகும்.
இந்த தவறு நடிகர் தனுசிற்கும் ராச்கீரனுக்கும் தெரிந்தே நடந்திருக்கும். குறித்த புகைப்படத்தை குறிவைத்து தேர்ந்தெடுத்து பயன்படுத்தியுள்ளார்கள். மலிவான பிரச்சார உக்தியாகவே இந்த படுபாதகச் செயல் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ளது. திரைப்படத்தின் போக்கிற்கு துளியளவேனும் தொடர்பற்ற நிலையில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அடையாளமாக விளங்கும் குறித்த படத்தை அதுவும் உருவச் சிதைப்பிற்குள்ளாக்கி பயன்படுத்தியமை வன்மையாக கண்டிக்கத் தக்கது.
தெரிந்து தொட்டாலும் தெரியாமல் தொட்டாலும் நெருப்பு சுடும். அது போன்றே தெரிந்தோ, தெரியாமலோ அல்லது ஆர்வக்கோளாறினாலோ தமிழீழத் தேசியத் தலைவர் படம் உள்ளிட்ட தேசிய அடையாளங்கள் மாற்றுதலுக்கோ உருவச்சிதைப்பிற்கோ உட்படுத்துதல் தேசச்துரோக குற்றமே.
பூணைக்கு யார் மணி கட்டுவது…?
இவ்வாறான அயோக்கியத்தனங்கள் குறித்து தெரியவரும் போது ஏற்படும் உள்ளக்குமுறலை எழுத்து வடிவில் இறக்கிவைப்பதைத் தவிர என்போன்ற எளியவர்களால் என்ன செய்துவிட முடியும்…?
தாம் தான் உண்மையான தமிழீழ விடுதலைப் புலிகள் என்று புலம்பெயர் தேசத்தில் ஏட்டிக்குப் போட்டியாக விழாக்களையும், நிகழ்வுகளையும், விளையாட்டு நிகழ்வுகளையும் நடத்தும் அதி மேதாவிகளே உங்கள் மேலான கவனத்தை இவ்விடயத்தில் கொஞ்சம் பதியுங்கள்.
கேட்பதற்கு நாதியற்ற இனமாக இருந்த தமிழர்களை நெஞ்சு நிமிர்த்திய பெருமையோடு உலாவச் செய்த தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தலைமையேற்று வழிநடத்திக் கொண்டிருக்கும் தலைவர் படத்தையும் தேசிய அடையாளங்களையும் காப்பாற்றுவதை விடுத்து வேறு என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்…?
சிங்களக் காடையர்களால் நட்ட நடு வீதியில் தமிழர்கள் ரயர் போட்டும், பெற்றோல் ஊற்றியும் உயிரோடு எரித்துப் படுகொலை செய்யப்பட்ட நிலையை மாற்றி தமிழர் என்ற அறத்திமிரோடு உலகமெங்கும் வலம்வரும் நிலையை ஏற்படுத்தியமைக்கு நாம் செய்யும்
கைமாறு இதுதானா…?
ஒவ்வொரு நாட்டிலும் பேரவை, மக்களவை என்றும் தமிழர் ஒருங்கிணைப்புப் குழு, நாடுகடந்த தமிழீழ அரசு என்றும் தலைமைச் செயலகம் என்றும் ஏராளம் அமைப்புகள் இருந்தும் உலகம் வியக்கும் விடுதலைப் போராட்டத்தின் வரலாறும் அடையாளங்கள், சின்னங்கள், குறியீடுகள் என்பனவும் அழிக்கப்பட்டுவருகின்றமை வெட்கக்கேடான விடயமாகும்.
பாகுபலி-1 படத்தில் வரும் “என் தாயையும் தாய்நாட்டையும் எந்தப் பகடைக்குப் பிறந்தவனும் தொட முடியாது…” என்ற வசனம் குறிப்பிட்ட சாதி மக்களை குறிப்பிட்டு அவமானப்படுத்துவதாக கூறி திரையரங்குகள் சிலவற்றின் முன் குறித்த சாதி அமைப்புகளைச் சேர்ந்த வெகு சிலரால் போராட்டம் நடத்தப்பட்டது. உடனடியாக அந்த வசனத்தை எழுதிய மதன் கார்க்கி மன்னிப்பு கேட்டதுடன் குறித்த வசனம் மாற்றியமைக்கப்பட்டது.
இதேபோன்று பாகுபலி-2 படம் வெளியாகும் தருணத்தில் புரட்சித் தமிழன் சத்தியராச் அவர்கள் மீதான இனவெறுப்பின் அடிப்படையில் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் காவிரி உரிமை தொடர்பான போராட்டத்தில் பேசியதை குறிப்பிட்டு பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால் கர்நாடகாவில் படத்தை வெளியிட விடமாட்டோம் என கன்னட அமைப்புகள் ஓரணியில் திரண்டு போராட்டம் நடத்தினார்கள்.
பெரும் பொருட்செலவு, ஆயிரக்கணக்காண தொழிலாளர்களின் எதிர்காலம் போன்ற காரணங்களை முன்னிறுத்தி புரட்சித் தமிழன் சத்தியராச் அவர்கள் வருத்தம் தெரிவித்ததையடுத்து கன்னட அமைப்புகள் தமது எதிர்ப்பை கைவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதே போன்று பல தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகும் போதோ அல்லது திரைக்குவந்து ஓடிக்கொண்டிருக்கும் போதோ அர்த்தமற்ற விடயங்களை முன்னிறுத்தி சாதி அடையாளத்துடன் சிலர் போராட்டங்கள் நடத்துவதையும் அதன் அடிப்படையில் காட்சித் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதும் தமிழ் சினிமாவில் வழக்கமான ஒன்றாகிவிட்டது.
சுய விளம்பரத்திற்காக மேற்கொள்ளப்படும் இவ்வாறான எதிர்ப்புகளின் மூலம் அவரவர் நினைக்கும் விடயங்களை அவர்களால் சாதிக்க முடிகிறதென்றால் ஏன் எங்களால் முடியாது…? முடியுமா.. முடியாதா..? என்பதற்கு முதலில் முயற்சிக்க வேண்டுமே. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அடையாளங்கள், சின்னங்கள், குறியீடுகள் முறைகேடாகப் பயன்படுத்தப்படுகையில் ஈழத்தமிழ் அமைப்புகள் சார்ப்பில் எதிர்ப்பு முயற்சிகள் எதுவும் நடைபெற்றதாக இதுவரை எந்த செய்தியும் அறிந்ததில்லை.
புராண இதிகாசங்களிலோ பண்டைய வரலாற்று நூல்களிலோ குறிப்பிடப்பட்டுள்ள விடயம் போன்றதல்ல தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாறு. நாம் எமது புலன்களால் நேரிடையாக பார்த்தும், கேட்டும், படித்தும் தெரிந்துகொண்ட நிகழ்கால சரித்திரமான தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றையோ அதன் அடையாளங்களையோ திரிபு படுத்தவோ, சிதைக்கவோ ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
புலம்பெயர் ஈழத்தமிழர் அமைப்புகள் மாவீரர்களின் தியாகத்தின் வழி நடப்பது உண்மையானால் இவ்விடயத்தில் காத்திரமான நடவடிக்கை எடுத்தேயாக வேண்டும். நடிகர் தனுசோ ராச்கீரனோ தொடர்புகொள்ள முடியாதவர்கள் கிடையாது. உடனடியாக அவர்களைத் தொடர்புகொண்டு குறித்த தவறை சுட்டிக்காட்டி அதற்கு பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கவும், படத்தின் அனைத்துவிதமான பதிவுகளில் இருந்தும் குறித்த காட்சிப்பதிவை உடனடியாக நீக்கவும் வலியுறுத்த வேண்டும்.
அதற்கு அவர்கள் உடன்படாவிட்டால் அவர்கள் தொடர்புபட்ட திரைப்படங்கள் எதையும் புலம்பெயர் நாடுகளில் வெளியிட அனுமதிக்கமாட்டோம் என்ற எச்சரிக்கையும் தெரியப்படுத்த வேண்டும். இந்த விடயமே முதலும் முடிவுமாக இருக்க வேண்டுமென்றால் இவ்வாறான கடும் எதிர்வினையை ஆற்றியே ஆகவேண்டும்.
இதை இந்த எளியவன் சொல்லி நாங்கள் என்ன கேட்பது என்ற அகந்தையில் புறக்கணித்துவிடாது உடனடியாக செயலில் இறங்கி நடவடிக்கை எடுப்பது மாவீரர்களின் உயிர்த்தியாகத்தின் உன்னதம் போற்றுவதாகவே அமையும். ‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’ என்று கூறி வீரச்சாவடைந்து விதைகுழிக்குள் மண்ணுறங்கும் நாற்பத்தையாயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்களது உதடுகள் உரைத்தது ‘அண்ணை கவனம்…’ என்றே.
ஆம், அண்ணை என்றழைக்கப்படும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தமிழினத்தின் முகமும் முகவரியும் ஆவார். அவரைப் பாதுகாப்பதன் மூலமே இன விடுதலையை உறுதிப்படுத்தலாம் என்று திடமாக நம்பியவர்கள் மாவீரர்கள். தமது உயிரைக்கொடுத்து அந்த நம்பிக்கையை காத்துநின்ற மாவீரர்களின் தியாகத்தின் வழியே செயற்படுபவர்களால் இந்த உருவச்சிதைப்பைக் கூட தடுக்க முடியாவிட்டால் வேறு என்னத்தை சாதிக்க முடியும்…?
‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’
– இரா.மயூதரன்