இந்திய எல்லைப் பகுதிக்குள் ஊடுருவிய பாக்கித்தான் சிறப்புப் படையினர், பாதுகாப்புப் பணியில் இருந்த இரு இந்திய இராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றதுடன் அவர்களின் தலைகளை துண்டித்து உடல்களையும் சிதைத்துள்ளனர்.
இராணுவ வீரர்களின் உடல்கள் சிதைக்கப்பட்டது காட்டுமிராண்டித்தனமான செயலாகும். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இராணுவத்தின் மீது ஒட்டுமொத்த நாடும் முழு நம்பிக்கை வைத்துள்ளது. நமது வீரர்கள் பாகித்தானுக்கு விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள் என இந்திய இராணுவ அமைச்சர் அருண் ஜேட்லி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது ஒரு கொடூரமான செயல். இராணுவ விதிமுறைகளை மீறி மனிதத்தன்மையற்ற முறையில் வீரர்கள் உடல்கள் சிதைக்கப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது. தகுந்த பதிலடி கொடுப்பதற்கும் இந்த சம்பவம் வித்திட்டுள்ளது என இந்தியாவின் இராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர், பாக்கித்தான் அதிகாரிகளை தொடர்புகொண்டு தெரிவித்துள்ளார்.
இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதற்கு மோடி அரசு உரிய பதிலடி கொடுக்க வேண்டுமென காங்கிரசு கட்சியும் வலியுறுத்தியுள்ளது.
தனது தந்தையின் தலை துண்டிக்கப்பட்டதற்கு பழிவாங்கும் விதமாக 50 பாக்கித்தானிய இராணுவத்தினரின் தலைகளை இந்திய வீரர்கள் கொண்டுவர வேண்டும் என எல்லை பாதுகாப்பு படையின் தலைமை காவலர் பிரேம் சாகரின் மகள் சரோஜ் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் கண்டனத்திற்குரியது. அதற்கான இந்தயத்தரப்பின் எதிர்வினைகளும் நியாயமானதே. ஆனால் வலிகளும், வேதனைகளும், இழப்புக்களும் எல்லோருக்கும் பொதுவானது. அதற்கான எதிர்வினைகளும் அவ்வாறே.
தமக்கு நடந்தால் மட்டும் போர் எச்சரிக்கை விடுக்கும் இந்தியா ஈழத்தமிழர்களை மட்டும் கொலைகார சிங்களர்களுடன் ஒன்றாக வாழ வேண்டுமென்று நிர்ப்பந்திப்பது எந்த விதத்தில் நியாயம்…?
அடுத்தவனுக்கு வந்தால் தக்காளி சட்னி… உங்களுக்கு வந்தால் இரத்தமா…? எனும் திரைப்பட நகைச்சுவை காட்சிக்கு ஒப்பானதாகவே இந்தியாவின் இச்செயற்பாடு அமைந்துள்ளது.
உலகத்திற்கு அகிம்சையை போதிக்கும் இந்தியா தன்விடயத்தில் மட்டும் பழிக்குப் பழி… இரத்தத்திற்கு இரத்தம்… தலைக்கு தலை… என்று எதிர்வினையாற்றுவது அதன் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துகிறது.
தமிழீழ எல்லைக்குள் சிங்களப் படைகளின் அத்துமீறிய வெறியாட்டம்!
போர் நிறுத்த ஒப்பந்த காலத்தில் தமிழீழ எல்லைக்குள் ஊடுருவிய சிறிலங்கா ஆழ ஊடுருவும் படையணியின் அத்துமீறிய கொலை வெறியாட்டத்தில் எத்தனை எத்தனை விலை மதிப்பில்லா உயிர்கள் பலியெடுக்கப்பட்டது தெரியுமா…?
வன்னியின் தெருக்களில் மக்கள் செல்ல அஞ்சும் சூழ்நிலையை சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணியின் அத்துமீறிய கொலை வெறியாட்டம் ஏற்படுத்தியிருந்தது. வாகனங்களில் செல்பவர்கள் என்றில்லாமல் உந்துருளியில் செல்பவர்களையும் ஏன் மிதிவண்டியில் செல்பவர்களையும் கூட விட்டுவைக்காது ஆழ ஊடுருவும் படையணியின் கிளைமோர் வேட்டையாடியது.
இவ்வாறு சிறிலங்கா அரசின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கிளைமோர் தாக்குதல்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அதி முக்கிய தளபதிகள் முதற்கொண்டு பள்ளி மாணவர்கள், மத குருக்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள், புத்திஜீவிகள் மற்றும் அப்பாவிப் பொதுமக்கள் பலரும் படுகொலை செய்யப்பட்டார்கள்.
• தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணாவின் பதின்நான்காம் ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வுகளில் பங்கு பற்றுவதற்காக ஒட்டுசுட்டானிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வேளை 26-09-2001 காலை 10.45 மணிக்கு ஒட்டுசுட்டானுக்கு அண்மித்த பகுதியில், சிறீலங்காப் படைகளின் ஆழ ஊடுருவும் படைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் கண்ணிவெடித் தாக்குதலில் கேணல் சங்கர் அவர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் உறுதுணையாக நின்று, இருபது ஆண்டுகளுக்குமேலாக தளரா உறுதியுடன், தமிழீழ விடிவே குறிக்கோளாகக் கொண்டு செயற்பட்டு வந்த கேணல் சங்கர் என்னும் பெருவிருட்சம் சாய்ந்தது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும் மூத்த தளபதியுமான கேணல் சங்கர் அவர்கள் தமிழீழ வான்படைத் தளபதியாவார். இவரது இழப்பு தமிழீழ விடுதலைக்காக நாம் கொடுத்த பேரிழப்பாகும்.
• கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பகுதியில் 29.06.2001 அன்று ஆழ ஊடுருவும் படைப் பிரிவினர் மேற்கொண்ட கிளைமோர் தாக்குதலில் கடற்புலிகளின் முதன்மைத் தளபதியான லெப்.கேணல் கங்கையமரன் மற்றும் மேஜர் தசரதன் ஆகியோர் வீரச்சாவடைந்தார்கள்.
கடற்புலிகளின் தொடக்க காலம் முதலே கடற்புலிகள் அணியில் பணியாற்றி வந்த லெப்.கேணல் கங்கையமரன், கடற்புலிகளின் நீரடி நீச்சற்பிரிவை உருவாக்கி அதன் பொறுப்பாளராகக் கடமையாற்றியதுடன் சிறிலங்கா கடற்படையினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல வெற்றிகரத் தாக்குதல்களை வழிநடத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
• 05.01.2008 அன்று அதிகாலைவேளை மன்னார் மாவட்டம் பள்ளமடுப்பகுதியில் சிறீலங்காப்படைகளின் ஆழஊடுருவும் படைப்பிரிவு நடாத்திய கிளைமோர்த் தாக்குதலில் கேணல் சாள்ஸ் உட்பட லெப்டினன்ட் வீரமாறன், லெப்டினன்ட் காவலன், லெப்டினன்ட் சுகந்தன் ஆகியோர் வீரச்சாவடைந்தனர்.
புலனாய்வுத்துறையின் முதுகெலும்பாக திகழ்ந்து பல வெற்றிகளின் வேராகவும் செயற்பட்ட கேணல் சாள்ஸ் அவர்களின் பங்களிப்பு தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் அழியாப்புகழ் பெற்றது.
• மட்டக்களப்பு மாவட்டத்தின் துணைத் தளபதி கேணல் ரமணன் அவர்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்திருந்த வவுணதீவில் பாதுகாப்பு அரண்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த வேளை சிறிலங்கா படையினரின் குறிச்சூட்டுத் தாக்குதலில் வீரச்சாவை தழுவிக்கொண்டார்.
• 10/06/2006 அன்று ஆழ ஊடுருவும் படையினர் மேற்கொண்ட கிளைமோர்த் தாக்குதலில் யாழ். செல்லும் படையணியின் தளபதியாக விளங்கிய மன்னார் களமுனை படைத்துறை தளபதி லெப்ரினன்ட் கேணல் மகேந்தி உள்ளிட்ட 4 மாவீரர்கள் வீரச்சாவடைந்திருந்தார்கள்.
லெப்ரினன்ட் கேணல் மகேந்தி அவர்கள் யாழ். குடாநாட்டில் உள்ள சிறிலங்கா இராணுவத்தினருக்கு சிம்ம செப்பனமாக விளங்கினார். ஓயாத அலைகள் 03 இராணுவ நடவடிக்கையின் போது யாழ். பகுதிகளை கைப்பற்றும் சமரில் முக்கிய பங்காற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
• சுனாமியால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் மீள்கட்டுமான பணிகள் மேற்கொண்டிருந்தவேளை 07/02/2005 அன்று மட்டக்களப்பு இராணுவ கட்டுபாட்டுப் பகுதியான புனானைப் பகுதியில் வைத்து லெப்.கேணல் கௌசல்யன் குழுவினர் பயணித்த வாகனத்தின் மீது சிறீலங்கா இராணுவம் மற்றும் துணை ஆயுதக் குழிவினர் மேற்கொண்ட தாக்குதலில் மட்டு – அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் லெப்.கேணல் கௌசல்யன், அம்பாறை மாவட்ட முன்நாள் பாராளுமன்ற உறுப்பினரும் மனித உரிமை ஆர்வலருமான மாமனிதர் சந்திரநேரு, மேஜர் புகழன், மேஜர் செந்தமிழன், 2ம் லெப்டினன்ட் விதிமாறன் ஆகியோர் வீரச்சாவடைந்திருந்தார்கள்.
• யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினருமான மாமனிதர் சிவநேசன் அவர்கள் 05/03/2008 அன்று பிற்பகல் 1:20 மணியளவில் வன்னி கனகராயன்குளம் பகுதியில் வைத்து ஆழ ஊடுருவும் படையினரின் கிளைமோர் குண்டுத்தாக்குதலில் படுகொலைசெய்யப்பட்டார். இத்தாக்குதலில் சிவனேசனின் வாகான ஓட்டுனர் பெரியண்ணன் மகேஸ்வரராஜா என்பபவரும் கொல்லப்பட்டார்.
• 2005 ஆம் ஆண்டு நத்தார் தினத்தன்று இரவுத் திருப்பலியிற் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக்கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராசசிங்கம் அவர்கள் திருப்பலியில் வைத்தே சிறிலங்கா இராணுவத்தினரின் ஆதரவு பெற்ற துணை ஆயுதக்குழுவினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இத்தாக்குதலில் இவரின் மனைவியுட்பட மேலும் எழுவர் காயமடைந்தனர்.
• வடக்கு-கிழக்கு மனித உரிமைச் செயலகத்தின் இயக்குநரும், மனித உரிமைச் செயற்பாட்டாளருமான அருட்தந்தை மாமனிதர் கருணாரட்ணம் அடிகளார் 20/04/2008 அன்று மாங்குளம் பகுதியில் உள்ள தேவாலயத்தில் இறை வழிபாட்டினை முடித்துக்கொண்டு தனது வெள்ளை நிற ஊர்தியில் திரும்பிக்கொண்டிருந்த வேளையில் மாங்குளம்-மல்லாவி வீதியில் சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினரால் நடாத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.
• இந்த வரிசையில் மாமனிதர் குமார் பொன்னம்பலம் (அரசியல்வாதி/வழக்கறிஞர்), மாமனிதர் ரவிராஜ் (நாடாளுமன்ற உறுப்பினர்), மாமனிதர் தராக்கி சிவராம் (ஊடகவியலாளர்/எழுத்தாளர்), நாட்டுப்பற்றாளர் நடேசன் (ஊடகவியலாளர்), நிமல்ராஜன் (ஊடகவியலாளர்) போன்றோர் சிறிலங்கா இராணுவத்தினராலும் அவர்களது ஆதரவு பெற்ற துணை ஆயுதக் குழுவினராலும் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள்.
• 2006 இல் மன்னார் பாசித்தென்றல் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினர் மேற்கொண்ட கிளைமோர் தாக்குதலில் வாகனத்தில் பயணம் செய்துகொண்டிருந்த பெண்களும் சிறுவர்களுமாக 9 பேர் அந்த இடத்திலேயே பலியாகியதுடன் நான்கு பேர் படுகாயமடைந்தனர்.
• சிறிலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியினர் கிளிநொச்சி நகரிலிருந்து 25 கிமீ மேற்கில் உள்ள ஐயன்கேணியில் நடத்திய கிளைமோர் தாக்குதலில் 9 பாடசாலைச் சிறுமிகள் உட்பட 11 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
• மன்னாரில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான கல்விளானில் சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினர் மேற்கொண்ட கிளைமோர்த் தாக்குதலில் அருட்திரு நிக்கலஸ்பிள்ளை பாக்கியரஞ்சித் அவர்கள் கொல்லப்பட்டார்.
• மாங்குளம் பகுதியில் தமிழீழ சுகாதார சேவைக்குச் சொந்தமான வாகனம் ஒன்றின் மீது சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினரால் நடத்தப்படட கிளேமோர் தாக்குதலில் தமிழீழ சுகாதார சேவைகள் பிரிவு பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட 5 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் இருவர் காயமடைந்தனர்.
• மன்னார் மாவட்டம் பாலம்பிட்டி – நட்டாங்கண்டல் வீதியில் சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் அதி முக்கிய தளபதிகள், போராளிகள், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், மதகுருமார், ஊடகவியலாளர்கள், புத்திஜீவிகள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் எனப் பலர், அமைதி உடன்படிக்கையின் பிரகாரம் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் என ஏற்றுக்கொள்ளப்பட்ட எல்லைக்குள் அத்துமீறி உள்நுழைந்த சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினர் மேற்கொண்ட கிளைமோர் தாக்குதலின் மூலம் படுகொலை செய்யப்பட்டார்கள்.
இவற்றையெல்லாம்விட மோசமான நிகழ்வு ஒன்று 02/11/2007 அன்று காலை அரங்கேறியது. தமிழீழ வான்பரப்பிற்குள் அத்துமீறிப் பிரவேசித்த சிறிலங்கா வான் படைக்கு சொந்தமான உலோக வல்லூறுகள் மேற்கொண்ட குண்டுத்தாக்குதலில் தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் பிரிகேடிய சு.ப.தமிழ்ச்செல்வன் அண்ணா மற்றும் லெப்.கேணல் அன்புமணி (அலெக்ஸ்), மேஜர் மிகுந்தன், மேஜர் கலையரசன், லெப்டினன்ட் ஆட்சிவேல், லெப்டினன்ட் மாவைக்குமரன் ஆகியோர் வீரச்சாவடைந்தார்கள்.
‘தேசத்தின் குரல்’ அன்டன் பாலசிங்கம் அவர்களின் மறைவின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பில் அமைதிப் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவராக செயற்பட்டுவந்த வேளையில் நன்கு திட்டமிட்டு துல்லியமாக மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதலில் அவர் இலக்குவைக்கப்பட்டமையானது சிறிலங்கா இராணுவத்தின் மிகப்பெரும் அத்துமீறலாகும்.
• 14/08/2006 அன்று தமிழீழ வான்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்த சிறிலங்கா வான்படைக்கு சொந்தமான நான்கு உலோக வல்லூருகள் மேற்கொண்ட துல்லியமான குண்டுத்தாக்குதலில் செஞ்சோலை வளாகம் இரத்தக்களறியானது. இக்கொலைவெறியாட்டத்தில் 61 சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டதுடன் 150 இற்கு மேற்பட்ட சிறிமிகள் காயமடைந்திருந்தார்கள்.
இதுபோக சிறிலங்கா வான்படை விமானங்கள் மேற்கொண்ட குண்டுத்தாக்குதல்களில் கொல்லப்பட்டும் காயப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கு மேலாகும்.
இவ்வளவு நடந்தேறிய நிலையிலும் ஏற்றுக்கொண்ட போர் தவிர்ப்பை இறுதிவரை இறுக்கமாகத் தொடர்வது என்பதில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் உறுதியுடனிருந்தார். எக்காரணத்தைக் கொண்டும் பழிக்குப் பழி… இரத்தத்துக்கு இரத்தம்… தலைக்கு தலை… என எதிர் நடவடிக்கையில் இறங்கவில்லை.
ஒருவேளை இவற்றுக்கெல்லாம் எதிர் நடவடிக்கையில் இறங்கியிருந்தால் சிங்கள தேசம் பல முள்ளிவாய்க்கால்களைக் கண்டிருக்கும். அவ்வாறு சிங்கள தேசத்து பேரழிவை தவிர்த்து பொறுமைகாத்துவந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் கைகளில் இருந்த ஆயுதங்களை பறித்து நிராயுதபாணிகளாக்கும் தந்திரத்தையே அப்போதைய இந்திய அரசு மேற்கொண்டது.
இந்தியா மட்டுமல்ல உலக நாடுகளும் சிறிலங்கா இராணுவத்தின் அத்துமீறல்களை கண்டிக்காது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதே அழுத்தங்களையும், நெருக்கடிகளையும் ஒருதலைப்பட்சமாக பிரயோகித்து வந்தன.
இன்றைய நிலையில் பழிக்குப் பழி… இரத்தத்திற்கு இரத்தம்… தலைக்கு தலை… என்று எதிர்வினையாற்றும் தகுதி தமிழர்களுக்கு மட்டுமே உள்ளது. தமிழர்களாகிய எமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கும், துன்ப-துயரங்களுக்கும், இன்னல்களுக்கும், நம்பிக்கைத்துரோகங்களுக்குமாக நாம் பழிவாங்க முற்பட்டால் அதன் விளைவுகள் உலகின் அத்தனை நாடுகளிலும் எதிரொலிக்கும்.
ஏனென்றால், தமிழர்களை அழித்தொழித்ததுடன் எமக்கான நீதியையும் தடுத்து தாமத்தபடுத்தி வரும் அயோக்கியத்தனத்தின் பின்னால் நிற்கும் அத்தனை நாடுகளுமே அதற்கு காரணமாகும். ஒட்டுமொத்த உலகத்தாலும் வஞ்சிக்கபட்டுக் கொண்டிருக்கும் ஒரே இனமாக தமிழினம் இருந்துவருகிறது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை எவ்வாறு பேரிழப்புகளுக்கு மத்தியிலும் இறுதிவரை இறுக்கமாக கடைப்பிடிக்கப்பட்டதோ அவ்வாறே ஆயுத மௌனிப்பும் கடும் இறுக்கமான நிலையில் காக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. போர் நிறுத்தத்தைப் போன்று ஆயுத மௌனிப்பும் இறுதிவரை கடைப்பிடிக்கபடுமா என்ற வினாவிற்கு சர்வதேசத்தின் செயற்பாடே பதிலுரைப்பாக அமையும்.
தலையிடியும் காய்ச்சலும் தனக்கு தனக்கு வந்தால் தான் தெரியும் என்பதைப் போன்று பாக்கித்தானின் அத்துமீறலுக்கு இந்தியா எதிர்வினையாற்றத் துடித்துக்கொண்டிருக்கிறது. ஏன் ஒன்றாக இருந்து பிரிந்தவர்கள்தானே நீங்கள். அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வைக்காண வேண்டியதானே!
நல்லுறவு அடிப்படையிலான துடுப்பாட்டத்தைக்கூட பாக்கித்தான் அணியுடன் ஆட அனுமதி மறுத்துவரும் இந்தியா எம்மை கொன்றொழித்து அடிமைப்படுத்தி ஆண்டுவிடத் துடிக்கும் சிங்களர்களுடன் இணைந்து வாழ நிர்ப்பந்திப்பது எந்தவிதத்தில் நியாயம்…?
‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’
இரா.மயூதரன்.
——————————————–
‘இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.’
-மேதகு வே.பிரபாகரன்-
தமிழீழத் தேசியத் தலைவர்.
‘இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.’
-மேதகு வே.பிரபாகரன்-
தமிழீழத் தேசியத் தலைவர்.