தைப்பொங்கலின் பின்னர் புதிய கூட்டணி; சிவாஜிலிங்கம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, January 1, 2020

தைப்பொங்கலின் பின்னர் புதிய கூட்டணி; சிவாஜிலிங்கம்!

எங்களது தரப்பிலிருந்து கொண்டு, அரசை காப்பாற்ற காலநீடிப்பு எடுத்துக் கொடுத்ததாலேயே இலங்கை தமிழ் அரசு கட்சியை எதிர்க்கிறோமே தவிர, தந்தை செல்வாவால் ஆரம்பிக்கப்பட்ட இந்த கட்சியை எதிர்க்க வேண்டிய தேவையில்லை. தந்தை செல்வா இறுதிக்காலத்தில் தமிழ் அரசுக்கட்சியை பின்பற்றவில்லை. அவர் தமிழர் விடுதலைக் கூட்டணியைத்தான் பின்பற்றினார். இன்றும் தந்தை செல்வாவின் சமாதியில் உதயசூரியன் சின்னம்தான் பொறிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார் எம்.கே.சிவாஜிலிங்கம்.

இன்று (31) யாழில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் அரசுகட்சி தன்னிச்சையான, அடாவடியான, இனத்தின் நலன்களிற்கு மாறாக செயற்பட்டதாலேயே நாம் வெளியேறி தனி அணி உருவாக்கினோம். தமிழ் அரசு கட்சியின் அடாவடி செயற்பாடுகளிற்கு எதிரான கொள்கையளவில் ஒன்றாக செயற்படும் அணிகளுடன் இணைந்து செயற்படுகிறோம்.

ஒரு சிலர் ஏற்பாட்டாளராக செயற்படவும் முன்வந்துள்ளனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடனும் பேச்சு நடத்த விரும்புகிறோம். அதற்கான சூழல் வந்தால் மிகப்பெரிய கூட்டணியாக அமையும்.



தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள புளொட், ரெலோ ஆகியனவும் எம்முடன் இணைய விரும்பினால் இணையலாம்.

கடந்த ஐந்து வருடத்தில் இராஜதந்திரம் எதுவுமில்லாமல், கோட்டை விட்டு ரணில் விக்கிரமசிங்கவை காப்பாற்றும் நிகழ்ச்சி நிரலில் மாத்திரமே செயற்பட்டார்கள். சர்வதேச விசாரணையை உள்நாட்டு விசாரணையென இரண்டு ஆண்டுகள் வீதம் இரண்டு முறை காலநீடிப்பு கொடுத்து நீர்த்துப் போக செய்யும் நிலையை ஏற்பட்டுள்ளது.

2011ம் ஆண்டு சிரிய பிரச்சனைக்கு போர்க்குற்ற விசாரணைக்காக ஐ.நா நிதி ஒதுக்கியுள்ளது. 2016ம் ஆண்டு பர்மாவில் ரோகிங்கியா முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 7,000 பேர்தான் இறந்தனர். அது இன்று சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு போயுள்ளது.

எங்களது தரப்பிலிருந்து கொண்டு, அவர்களை காப்பாற்ற காலநீடிப்பு எடுத்துக் கொடுத்ததாலேயே இலங்கை தமிழ் அரசு கட்சியை எதிர்க்கிறோமே தவிர, தந்தை செல்வாவால் ஆரம்பிக்கப்பட்ட இந்த கட்சியை எதிர்க்க வேண்டிய தேவையில்லை. தந்தை செல்வா இறுதிக்காலத்தில் தமிழ் அரசுக்கட்சியை பின்பற்றவில்லை. அவர் தமிழர் விடுதலைக் கூட்டணியைத்தான் பின்பற்றினார். இன்றும் தந்தை செல்வாவின் சமாதியில் உதயசூரியன் சின்னம்தான் பொறிக்கப்பட்டுள்ளது. வீடு அல்ல. வீட்டுச்சின்னம் 28 வருடங்களின் பின்னர் ஏற்பட்ட நெருக்கடியான நிலைமையை சமாளிக்க தற்காலிகமாக செய்யப்பட்ட ஏற்பாடு.

தமிழீழ தேசியத் தலைவரால் உருவாக்கப்பட்ட கூட்டு என சொல்லிக் கொண்டு, தமிழ் தேசியத்திற்கு துரோகம் செய்யும் அணியாக கூட்டமைப்பு செயற்படுவதாலேயே நாம் இந்த புதிய கூட்டமைப்பை உருவாக்கினோம்.

ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் மக்கள் கூட்டணி, தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகம் ஆகிய கட்சிகளுடன் ஒரு சுற்று பேச்சு நடத்தியுள்ளோம். தைப்பொங்கலின் பின்னர் கூட்டணி கையொப்பமிடப்படலாம் என்றார்.