எதிர்காலத்தில் அரசில் இணைந்து அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்வது பற்றி சிந்திக்கலாமென நேற்றிரவு தனியார் தொலைக்காட்சியொன்றின் நிகழ்ச்சியில் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தார்.
கூட்டமைப்பு அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவிகளை பெற்று, சேவையாற்ற வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அது குறித்து பரிசீலிப்போம் என்று சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தீர்வு வரும் வரை அரசில் இணைவதில்லையென கூட்டமைப்பு ஒரு கொள்கை முடிவை வைத்துள்ளது, இதனால் மக்களிற்கு சேவையாற்ற முடியாமல் போகும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைப்பாட்டை சுமந்திரன் நேற்று (17)தான் பகிரங்கமாக அறிவித்திருந்தாலும், கடந்த ஒரு மாதமாக தமிழ் அரசு கட்சிக்குள் இந்த விவகாரம் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருவதை தமிழ் பக்கம் ஏற்கனவே அறிந்திருந்தது.
இலங்கை தமிழ் அரசியலில் பல சீரழிவுகளை ஏற்படுத்தி வரும் உலகத்தமிழர் பேரவை, கனடிய தமிழ் காங்கிரஸ் ஆகியனவே இந்த திட்டத்தின் பின்னணியில் செயற்படுகின்றன.
இலங்கை அரசியலில் புலம்பெயர்ந்த சக்திகள் பணத்தை கொடுத்து, இங்கு கூலிப்படைகளை போன்ற அமைப்புக்களை உருவாக்கி அரசியலில் சீரழிவைஏற்படுத்துவதாக பரவலாக குற்றம்சாட்டப்படுவதுண்டு. பல்கலைகழக மாணவர்கள், மற்றும் உதிரி அமைப்புக்களை நோக்கி இப்படியான விமர்சனங்களை சிலர் வைப்பதுண்டு. ஆனால், அவை எல்லாவற்றையும் விட, வெளிநாட்டு பணத்தால் கட்டுப்படுத்தப்படும் மிகப்பெரிய தமிழ் கட்சியாக இலங்கை தமிழ் அரசு கட்சியே உள்ளது. கனடா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள மேற்படி அமைப்புக்கள் பணத்தை கொடுத்து, தமிழ் அரசியலில் பெரும் சீரழிவை ஏற்படுத்தியுள்ளன.
ப.சத்தியலிங்கம், இ.ஆர்னோல்ட், கே.சயந்தன், அ.அஸ்மின் ஆகியோர் முக்கியத்துவப்படுத்தப்பட்டது, வடக்கு முதலமைச்சரிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை ஆகியவற்றின் முழுமையான பின்னணி காரணமாக கனடிய தமிழ் காங்கிரஸ் மற்றும் உலகத் தமிழர் பேரவையே செயற்பட்டன.
இந்த நிலையில், கடந்த மாத இறுதியில் இலங்கைக்கு வந்திருந்த கனடிய தமிழ் காங்கிரஸ் குழுவொன்று சில நாட்கள் இலங்கையில் தங்கியிருந்தது. அப்போது, தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்திலும் கலந்து கொண்டனர்.
அவர்கள் இரா.சம்பந்தனை தனிமையில் சந்தித்து பேசியபோது, உரிமை அரசியலை செய்தாலும், அரசில் இணைந்து அமைச்சு பதவியையும் ஏற்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இரண்டையும் செய்வதாக இரா.சம்பந்தன் அவ்வளவு ஆர்வமில்லாமல் குறிப்பிட்டதை ஏற்கனவே தமிழ்பக்கம் அறிந்திருந்தது.
இந்த குழுவினர் மாவை.சேனாதிராசாவையும் சந்தித்து இதே கோரிக்கையை முன்வைத்தனர். எனினும், மாவை.அதை நிராகரித்திருந்தார்.
இதேவேளை, இந்த குழுவினர் முன்வைத்துள்ள அடுத்த கோரிக்கை, கிழக்கில் இராசமாணிக்கம் சாணக்கியன், யாழில் இம்மானுவேல் ஆர்னோல்ட் ஆகியோரை அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் களமிறக்க வேண்டுமென்பது. இதற்கு இரா.சம்பந்தன் சம்மதம் தெரிவித்துள்ளார்.