தற்கொலைதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, April 22, 2019

தற்கொலைதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்!

நாட்டில் மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய 55 சந்தேக நபர்கள் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

அதில் பிரதானமான விசாரணைகளை முன்னெடுக்கும் சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனயவுப் பிரிவின் பொறுப்பில் 26 சந்தேக நபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இந்த 26 பேரில் சி.ஐ.டி.யால் கைது செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்ட சந்தேக நபர்கள் பலரும், தம்புள்ளையில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்ட இரு முக்கிய சந்தேக நபர்களும் அடங்கின்றனர். தம்புள்ளையில் கைது செய்யப்பட்ட இருவரும், மாவனெல்லை பகுதியில் கடந்த வருடம் இடம்பெற்ற புத்தர் சிலை உடைப்பு விவகாரத்தில் அவசியமான சந்தேக நபர்கள் என பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்தன.

இதனைவிட கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பில் 3 சந்தேக நபர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன், வெள்ளவத்தை பொலிஸார் கைதுசெய்த இருவர் அந்த பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இதனைவிட ஷங்ரில்லா ஹோட்டலில் பிரதான சூத்திரதாரி மொஹம்மட் சஹ்ரானுடன் இணைந்து தற்கொலை தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் இன்சான் சீலவன் என்பவரின் தொழிற்சாலையில் சேவையாற்றிய ஒன்பது பேரை வெல்லம்பிட்டிய பொலிஸார் கைது செய்திருந்தனர். அவர்கள் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டு எதிர்வரும் மே 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.



இதனைவிட தெஹிவளை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தற்கொலை தாக்குதல் தொடர்பில் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினர் முன்னெடுக்கும் சிறப்பு விசாரணைகளில் வெல்லம்பிட்டிய - லன்சியாஹேன பகுதியில் வைத்து மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர் விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குனசேகர உறுதி செய்தார்.

மேலும் மாதம்பை பகுதியில் வைத்து 5 சந்தேக நபர்களும், கம்பளை, கட்டுகஸ்தோட்டை பகுதிகளில் வைத்து 4 சந்தேக நபர்களும் கந்தானை பகுதியில் தொலைதொடர்பு உப கரணங்களுடன் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் வத்தளை - எந்தரமுல்ல பகுதியில் வீடொன்றில் சந்தேகத்துக்கு இடமான முறையில் தங்கியிருந்த இருவரும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் கைது செய்திருந்தனர்.

இந் நிலையில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சர்வதேச பொலிஸார் (இன்டர்போல்) சி.ஐ.டி. விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளனர்.

இதேவேளை 8 இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களில் 7 சம்பவங்கள் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் என அரச இரசாயன பகுப்பயவுகள் ஊடாக தெரியவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது