மக்களை ஒன்று திரட்டுவதன் மூலம் திரளுகின்ற அரசியல் வலுமூலமாக தமிழீழக் கனவினை நிச்சயம் அடைவோம் என அமெரிக்காவின் ஐக்கிய நாடுகள் முன்றலில் இடம்பெற்ற எழுகதமிழ் எழுச்சி நிகழ்வில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்திருந்த இந்த எழுகதமிழ் நிகழ்வில், அமெரிக்கா வாழ் தமிழர்கள் மட்டுமல்ல, கனடாவில் இருந்து மக்கள் பங்கெடுத்திருந்தனர்.
வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கமும் இங்கு உரையாற்றியிருந்தார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவிக்கையில், நாங்கள் பாதிக்கப்பட்ட மக்களே அன்றி தோல்வி கொண்ட மக்கள் அல்ல. நாங்கள் இனஅழிப்புக்கு உள்ளாக்கபட்ட மக்களே அன்றி, நாங்கள் இரக்கத்துக்கு உள்ளான மக்கள் அல்ல.
நாங்கள் சிறிலங்கா அரசிடமோ, சர்வதேசத்திடமோ கெஞ்சவில்லை. எங்கள் உரிமையினை நாங்களே வென்றெடுக்கலாம் என்ற நம்பிக்கையில் உறுதியுடன் ஒன்றுகூடியுள்ளோம்.
மாறிவருகின்ற சர்வதேச சட்டங்களில் மாறிவருகின்ற சர்வதேச உறவுகளின் அடிப்படையில் தேசமற்ற இனமாகிய தமிழினத்துக்கு அங்கு வாய்ப்பு இருக்கின்றது. அந்த வாய்ப்பினை பயன்படுத்தி உலக அரங்கில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வல்லமை எங்கிடம் இருக்கின்றது.
எங்களுடைய போராட்டம் அறம் சார்ந்தது. எங்களிடம் அறவலிமை இருக்கின்றது. அறிவு வலிமை இருக்கின்றது. இவற்றை அரசியல் வலிமையாக மாற்றுவதே நம் முன்னால் உள்ள சவாலாக இருக்கின்றது.
மக்களை ஒன்றதிரட்டுவதும் மூலம் இந்த அரசியல் வலுமை உருவாக்கி கொள்ளலாம். இந்த அரசியல் வலுமூலமாக எங்களுடைய தமிழீழக் கனவினை நிச்சயம் அடைவோம் என தெரிவித்துள்ளார்.