பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் வவுனியாவில் வெளிநாட்டு அகதிகள்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, May 17, 2019

பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் வவுனியாவில் வெளிநாட்டு அகதிகள்!

தமிழ் அரசியல் தலைமைகள் மற்றும் தமிழ் மக்களின் எதிர்ப்பினையும் மீறி இலங்கையில் தஞ்சம் கோரிய வெளிநாட்டு அகதிகளில் ஒரு தொகுதியினர் வவுனியாவில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகள் 35 பேர் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையமாக செயற்படும் கூட்டுறவுக்கல்லூரியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

எனினும் குறித்த விடயம் தொடர்பாக செய்தி சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், வவுனியா மாவட்ட செயலகத்தில் குறிப்பட்ட சில அதிகாரிகளுக்கு  சனி ஞாயிறு உட்பட விடுமுறை தினங்களில் கடமைக்கு சமூகமளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இலங்கையில் தஞ்சம் கோரிய பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான், சிரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 1600 அகதிகளை, அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தத்தின் பின்னர் தங்க வைப்பத்தில் பாரிய சிக்கல் நிலை ஏற்பட்டிருந்தது.

ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான முகவர் நிலையத்தில் பதிவுகளை மேற்கொண்டு மூன்றாம் நாடொன்றுக்கு செல்வதற்காக காத்திருந்த அகதிகளுக்கு பாதுகாப்பு வழங்குமாறு ஐ.நா. அதிகாரியொருவர் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தத்தினை பிரயோகித்திருந்தார்.

இந்நிலையில் அகதிகளை தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்டு முன்னாள் விடுதலைப்புலி போராளிகளுக்கான புனர்வாழ்வு நிலையமாக செயற்பட்ட வவுனியா பூந்தோட்டம் கூட்டுறவு கல்லூரியில் தங்க வைக்க ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டது.

எனினும் உள்ளுர் அரசியல்வாதிகள் மற்றும் தமிழ் தலைமைகள் அதற்கு பலத்த எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்த நிலையில், வெளிவிவகார அமைச்சர் அண்மையில் வவுனியாவிற்குச் சென்று அரசியல்வாதிகளை சந்தித்திருந்தார்.

இதன்போது வவுனியா பூந்தோட்டம் கூட்டுறவுக் கல்லூரியில் அகதிகளை தங்க வைக்கக்கூடாது எனவும் கடந்த 10 ஆண்டுகளாக வடக்கு கிழக்கிற்கான ஒரேயோரு கூட்டுறவுக்கல்லூரி இராணுவக்கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் அரசியல்வாதிகள் விசனம் தெரிவித்திருந்தனர்.

இதன் காரணமாக குறித்த இடத்தில் அகதிகளை தங்க வைப்பதில்லை என கருத்துப்பரிமாற்றங்கள் அங்கு இடம்பெற்றிருந்தபோதிலும் நேற்று இரவு பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகள் 35 பேர் அங்கு குடியமர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.